அறுபத்துமூவர் திருப்பணி மன்றம்
ஓர் அறிமுகம் மற்றும் நோக்கம்
திருத்தொண்டர்த் திருத்தொகை அருளிய சுந்தரரும்
திருத்தொண்டர்த் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பியும்
திருத்தொண்டர் புராணம் அருளிய சேக்கிழார் பெருமானும்
போற்றிப் புகழ்வது திருத்தொண்டராம் அறுபத்துமூவர் தமையே.
தூய வழி சென்று ஆய அருட் பெருங் கருணையாம் அம்பலத்தாடுவானைப் போற்றிப் பரவி பயனுள் தொண்டுகள் பலவுஞ்செய்து உலகெலாம் உய்ய வழி செய்தே, நல்ல நெறிதனை செல்லு வழியாகக் காட்ட தீந்தமிழ் சிறப்புரத் திருமுறை தன்னைத் தந்தனரே.
அவ்வடியார் தம்மின் வழி நடத்தலே நம்மின் தலைமைக் கடன். அவர்தம் பெருமைகளை உலகறிய வெளிபடுத்தலே தலைமைப் பணி. இதனைச் செயல்படுத்தும் விதம் அடியவர் அறுபத்து மூவரின் அவதாரத் தலந்தோறும் அவ்வடியார்க்குத் தனியாக ஓர் ஆலயம் அமைத்து அவர் தம் புகழ் பாடலை வழிபாடாக தினம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
அக்காலப் பெருவேந்தர் இவ்வடியாரின் பெருமைகளுணர்ந்தே ஆடல்வல்லானுக்கு வானளாவிய பெருங்கோயில்கள் பலவும் அமைத்து இவ்வடியவர்களுக்கும் ஆலயமமைத்து திருவருள் தேடலுடன் குருவருளும் நாடினர்.
காலச் சகடம் குழலும் போது சீற்றங்கள் இவ்வடியாரின் ஆலயங்களை அழித்ததுண்டு. சிலவை தப்பி இன்றும் நம்மிடம் இருப்பதும் உண்டு, இருக்கும் சில ஆலயங்களும் சீந்துவாரற்று சிதிலமாகி சீரழிந்து வரும் நிலையும் உண்டு.
அந்நாளில் நிலவிய செம்மை வாழ்வதனை சைவமும் தமிழும் கைகோர்த்துச் செய்தன. பொற்காலமாம் அக்காலத்தைப் புதுப்பித்து மீண்டும் ஒரு பொற்காலந்தனைப் படைக்க ... தேடல் துவங்கியது. .