ஆதங்கம்

எண் திசையும் புகழ் மணக்க பொன்மொழி தமிழ் தன்னை நாடியாக்கிக் திருமுறை தந்த நாயன்மார்கள்.
 
தன்நலம் என்றும் கருதாது பொன்னம்பலத்தாடுவோனைப் போற்றிப் பரவி ஆற்றல் பல செய்த நாயன்மார்கள்.
 
சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமம் என்பது போல் சிவன்பால் அன்புடையார்
 
எல்லோரும் அவன் முன் சமம் என சமத்துவம் கண்ட நாயன்மார்கள்,
 
இவர் தம்மின் இறவா புகழ் என்றும் நிலைக்க இருந்த ஆலயங்கள் பலவும் பாழாகிவிட்டன.  பலவற்றில் ஏனென்று கேட்க ஆளில்லாமல் சீந்துவாரற்று சீர்குலைந்து கிடக்கிறது. ஆவ்வூரில் உள்ளவர்களுக்கே அவ்வூர் தன்னில் அவதரித்தார் நாயன்மார் என்பது கூட தெரியாமலிருக்கிறது. 
ஆலயக் கட்டிடத்தில் ஆலமர விழுது வேரூன்ற விரிகலோடு இடிபாடாகி விட்டிருக்கிறது.  ஆலயக் கட்டிடத்தில் ஆலமர விழுது வேரூன்ற விரிசலோடு இடிபாடாகி விட்டிருக்கிறது.  அல்லது அவ்வூர் மக்கள் நிலத்தை ஆக்கரமித்து தனதென்று சொந்தம் கொண்டாடுகின்றனர்.
 
இறைப்பணியில் இன்றளவில் ஆயிரமாயிரம் அன்பர்கள் இயங்கி வருகின்றனர்,  இவர்களெல்லாம் நாயன்மார்களின் பக்கம் சிறிது கவனம் செலுத்தி இன்றியமையாத இப்பெரும் பணியை வெற்றிபெறச் செய்தல் மிக அவசியம்.  நம் முன்னோர் விட்டுச் சென்ற மகத்துவத்தை நம் சந்ததிகளுக்குக் கொடுக்க வேண்டும்.  தாய்க்கு நிகரானத் தமிழ்மொழியை கண்ணின் மணிபோல் காத்தல் கடமை.
 
நாயன்மார்களின் பெருமைபாடி திருமறைகளை தினமும் ஓதும் மன்றங்களும் கூட்டங்களும் மிகையாக உள்ளது.  இக்குழுமமெல்லாம் ஒன்று கூடி கருத்தில் கொள்வது நாயன்மார்களுக்கு ஆலயம் அமைக்கும் பணியே எனச் சேர்ந்தால் நமது இலக்கை எளிதில் ‍அடைந்து விடலாம். 
 
முக்கியமாக இப்பெரும் பணிக்கு வியாபார நோக்கம் தவிர்த்திடல் வேண்டும்.  விளம்பர நோக்கம் அறவே கூடாது.  ஆதாய நோக்கம் முற்றிலும் கெடுதி.  அம்பலத்தாடுவானின் பொற்கழலே போற்றி என்று அதைப் பற்றிய அடியார் தம் பொற்பாதமே போற்றி என்று சேவையெனச் செய்தல் வேண்டும். 
 
இத்தனைப் பெரிய முயற்சிக்கு ஆதினங்களும் மடங்களும் சமயப் பெரியோர்களும் ஆசி வழங்குவதோடு நில்லாமல் நல்ல ஒரு வழியையும் காட்டி நடத்திச் செல்ல வேண்டும்.
 
அரசுத் துறைகளும், ஆன்மீகக் கருத்துக்களுக்கு வேறுபட்டிருந்தாலும், இப்பெரும் பணி சமத்துவத்திற்கு செய்யப்படுவது, தமிழுக்குச் செய்யப்படுவது, தமிழர்கள் கண்ட மேன்மை மிக சமுதாயத்திற்குச் செய்யப்படுவது என கருதி இதற்கு துணை நிற்க வேண்டும்.
 
அடியவர் அறுபத்துமூவர் அருள் ஞான உலா
 
அறுபத்து மூன்று நாயன்மார்களுக்காக தனித்தனியே அவர்களின் அவதாரத் தலங்களில் அவர்களக்கென்று ஓர் ஆலயம் அமைத்திட ஆங்காங்கு நாம் சென்று பார்த்தால் பரிதாபம் தான்.  அறியாமை என்னும் மாபெரும் திரை அந்தந்த ஊர் மக்களின் மனதை மூடி இருக்கின்றது.
 
இதோ இப்போதும் திருமூலருக்காக சாத்தனூர் சென்று பார்த்தால் ஐயனார் கோயிலில் திருமூலரின் திருஉருவம் வைத்திருக்கிறார்கள்,  முற்காலத்தில் திருமந்திரம் ஓதிய படியே திருவாவடுதுறை வரை ஊர் மக்கள் வருவது வழக்கு.  திருவாவடுதுறையில் குருபூசை நடக்கும். 
 
இன்று ...... சிலரங்கு திருமூலர் யார் எனக் க‍ேட்கிறார்கள்.  மண்டிக்கிடந்த காடையும் முட்புதர்களையும் அழித்து திருமூலருக்கு ஒரு கோயில் அமைக்கும் பணி மிகுந்த முயற்சிக்குப்பின் துவங்கியது.
 
இளையான்குடிக்கு சென்றீர்களானால் வேதனை மனதை ஈட்டி போல் தாக்கும்.  மாற நாயனாரின் திருவுருவச்சிலையை அகற்றிவிட்டு அவ்விடத்தில் நாக பிரத்திஷ்டை செய்து வழிபடுகின்றார்கள். மாற நாயனார்க்கு சொந்தமான இடம் குடிசைகளாலும் கடைகளாலும் ஆக்ரமிப்பில் உள்ளது.  அந்தோ பரிதாபம்.
 
இதுபோன்ற அறியாமை தனை நீக்கி நாயன்மார்களுக்கு அவர்களின் சிறப்பினை எடுத்துக்காட்டும் வண்ணம் கோயிலமைத்து குருபூசை நடத்த வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தே நிலவும் என்பதில் ஐயமில்லை.
 
கருத்து ஒருமித்தாலும் கூடி நின்று செயல்பட்டாலே இந்தச்செயல் சாத்தியம்
 
இந்தக் குறிக்கோளினை எடுத்துக்காட்டவே
"அடியவர் அறுபத்து மூவர் அருள் ஞான உலா" ஏற்படுத்தியுள்ளோம். 
 
அறியாமை எனும் பனிமூட்டத்தை நீக்கி பாதை விளங்க செய்திடவும், சிறப்பெல்லாம் கார் மேகம் மூடிக்கிடக்க, அதனை விலக்கி பொற்கிரணம் போல் பொலிந்திடச் செய்திடவும், ‍அனைவரும் நாயன்மார்களின் சிறப்புக்களை அறிந்திட ஊர்வலம் ஒன்று அமைத்திட திருவருளால் சித்தித்த‍ே.
 
நாயன்மார்கள் அறுபத்து மூவர், தொகையடியார் ஒன்பதின்மர், மாணிக்கவாசக பெருமான், சேக்கிழார் பெருமான், நம்பியாண்டார் நம்பி, பொள்ளாப் பிள்ளையார், நடராஜர் பெருமான், சிவகாமி அம்மை என 82 திருமேனிகளை ஐம்பொன்னில் வடித்து, பேருந்தொன்றின் சட்டத்தின் மேல் பொன்னம்பலம் போல் வடிவமைத்து, இத்திருமேனிகளை அதில் வைத்து ஊர்கோலமாக எடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளது.
 
தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களின் தலைநகரங்கள், நாயன்மார்களின் அவதாரத்தலங்கள், முக்தித்தலங்கள், என 180 தலங்களில் நாயன்மார்களை எழந்தருளச் செய்திட சித்தித்துள்ளது.  ஓவ்வொரு தலத்திலும் நாயன்மார்களைப் பற்றிய சிறப்புரை நிகழும்.
 
"உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுத்த அம்பலத்தான் ஆடும் பொன்னம்பலத்தில் இவ்வருள் ஞான உலா துவங்கி சேக்கிழார் பெருமான் அவதரித்த குன்றத்தூரில் நிறைவு பெரும்.  நிறைவு விழா ஒட்டியே சென்னையில் சைவ மாநாடு ஒன்று நிகழ்த்தப்படும்.
 
இம்மாபெரும் நிகழ்வு மகத்தான வெற்றிகாண தமிழீன்ற பெருமக்களும், தமிழ் நேயர்களும், திருமுறைச் செல்வர்களும் உலகெலாம் பரவியுள்ள தமிழன்பர்களும் பங்கேற்க வேண்டும்.
 
தைத் திங்களில் துவங்கி அறுபத்து மூன்று நாட்களுக்கு இவ்வருள் ஞான உலா தொடரும்.
 
ஊர் கூடித் தேரிழுக்க அனைவரையும் விளிக்கின்றோம்.  ஊர்வலத்தை நடத்தி வைக்க அனைவரும் கூடி வாரீர்..
 
அறுபத்து மூவரின் அருள்பெறவே நாடி வாரீர்..
 
பெரும் பணிக்குப் பெருளுதவி தேவை
அருள்கூர்ந்து நல்குவீர்
 
‍பொருளுடையோர் பொருள்  தருக
அருளுடையோர் ஆலேசனைத் தருக
தொண்டு செய்வோர் தொடர்ந்து வந்து உதவுக
ஏதுமற்றோர் எழுந்தருளிப் போற்றுக
 
அவனருளாலே அவன் தாள் வணங்கி
 
திருச்சிற்றம்பலம்.

Home  |  About Us  |  Gallery  |  Nayanmar Temple  |  News  |  Donations  |  Contacts Us  |  Guide Map
Powered by: MBW